கமலா ஹாரிஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ட்ரம்ப்புக்கு ஜோ பிடென் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் கரோனாவால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் ஆகியோர் நாடு முழுவதும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இரு கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான முதல் சுற்று நேரடி விவாத நிகழ்ச்சி முடிவடைந்துள்ள சூழலில், இரு கட்சியைச் சேர்ந்த துணை அதிபர் வேட்பாளர்களும் நேரடி விவாதம் மேற்கொண்டனர்.
இதில் ஆரம்பம் முதல் குடியரசு கட்சியின் செயல்பாடுகளையும், அதிபர் ட்ரம்ப்பின் பல்வேறு திட்டங்களையும் சரமாரியாக விமர்சித்தார் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். இந்நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ட்ரம்ப், "கமலா ஹாரிஸ் கொடூரமானவர். நவம்பர் 3-ம் தேதி நடக்கும் தேர்தலில் ஜோ பிடென் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா அதிபராகிவிடுவார். ஜோ பிடென் அதிபராகப் பதவி ஏற்றால் இரு மாதங்கள்கூட நீடிக்கமாட்டார் என்பது என்னுடைய கருத்து. நமது நாட்டுக்கு ஒரு கம்யூனிஸ்ட்டையா தலைவராக தேர்வு செய்யப் போகிறோம். அவர் எல்லைகளைத் திறந்துவிடுவேன் என்று கூறுகிறார். கொலைகாரர்களையும், சதித்திட்டம் தீட்டுவோர்களையும், பலாத்காரம் செய்பவர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க முயல்கிறார்" என விமர்சித்திருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், இதற்கு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "அமெரிக்க மக்கள் எல்லோரும் நோயாளிகளாக, தளர்ந்துபோய்விட்டனர். கமலா ஹாரிஸ் பற்றிய ஜனாதிபதியின் கருத்து வெறுக்கத்தக்கது, ஜனாதிபதி அலுவலகத்தின் தரத்தை தாழ்த்தக்கூடியது. ஜனாதிபதி யார் என்று மக்கள் அறிந்துகொண்டுவிட்டனர். மிகப் பலமான கமலா ஹாரிசை எதிர்கொள்வது என்பது டிரம்புக்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.