கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆறு வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 1.6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6.5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் பணி, பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஆறு வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கடந்த ஆறு வாரங்களில் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.6 கோடி பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கரோனா தோற்று நமது உலகை மாற்றியுள்ளது. உலக நாடுகள் ஒன்றுபட்டுச் செயல்படத் துவங்கியுள்ளன. நாம் தொற்றுநோய்களின் கைதிகள் அல்ல. நம் ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். எதிர்காலம் நமது கைகளில்தான் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.