பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.
அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். அதன்பின் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
இதற்கு சற்று முன்னதாக பராக் ஒபாமா தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், மோடியுடன் உரையாடினால், இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் குறித்தும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் ஆலோசிப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி அளித்தார். இந்த பேட்டி பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரது செய்தியாளர் சந்திப்பிற்கு சற்று முன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது இது குறித்து பேசிய அவர், பிரதமர் மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவருடன் நான் உரையாடினால் உரையாடலின் ஒரு பகுதி, ‘இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்’ என்பது குறித்தானதாக இருக்கும். இந்து மக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் சிறும்பான்மையினரின் பாதுகாப்பு முக்கியமான ஒன்று. ஜோ பைடன், பிரதமர் மோடியுடனான தனது உரையாடலில் இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம் சிறும்பான்மையின மக்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார். ஒபாமா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இணைய வாசிகள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.