Skip to main content

“பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்...” - இஸ்ரேல் எச்சரிக்கை

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Israel warns will not supply electricity to Gaza unless hostages are released

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 5 நாளாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. 

 

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன. 

 

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானவர்களை ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. மேலும், காசா மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு பிணைக்கைதி கொல்லப்படுவார் என்று ஹமாஸ் கூறியிருக்கிறது. 

 

இந்த நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவிற்கு மின்சாரம் வழங்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. காசாவில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் காசாவிற்கு தொடர்ந்து மின்சாரம் கிடைக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் எனவும்  மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்