இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறிய நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை நடத்தியது.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த தாக்குதலில் 99 ட்ரோன்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடுவானில் இடைமறித்து அழித்தன. இதனால் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் சண்டையை விட ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மிக தீவிரமான போர் ஏற்படும் என ஆய்வாளர்கள் கணித்த நிலையில் சர்வதேச நாடுகளில் அழுத்தால் பதற்றம் சற்று தணிந்திருந்தது.
இந்த நிலையில் ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆலோசகர் கமால் கராசி, “இந்த நாள் வரை அணுகுண்டை தயாரிக்கும் முடிவு எங்களிடம் இல்லை. ஒருவேளை ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றி அணுகுண்டு தயாரிப்போம்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் கமால் கராசியின் பேச்சு மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.