கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவியது.
குவாசிம் சுலைமானியை கொல்வதற்கு உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப், தற்போது தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், அவர் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெறும் என ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், கோல்ஃப் விளையாடும் ஒருவர் ட்ரோனால் குறிவைக்கப்பட்டிருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் புகைப்படத்தில், "ஜெனரல் சுலைமானியைக் கொலை செய்ய உத்தரவிட்டவர்களுக்கும், அதனைச் செய்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தப் பழிவாங்கல் நிச்சயமாகச் சரியான நேரத்தில் நடக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிப்பதாகக் கருதப்படுகிறது.