உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்த எலான் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உட்பட ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து தான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக(சிஇஒ) இருக்க வேண்டுமா அல்ல விலக வேண்டுமா என ஒரு வாக்கெடுப்பினை ட்விட்டரில் நடத்தியிருந்தார். அதில் 57 சதவிகிதம் பேர் எலான் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டும் என வாக்களித்திருந்தனர். இதையடுத்து எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்தப் பதவிக்கேற்ற ஒரு முட்டாளைக் கண்டறிந்த பின், தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நான் விலகிக் கொள்வேன். அதன் பின்பு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டுமே தலைமை வகிப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் இமெயிலை கண்டுபிடித்தவருமான சிவா அய்யாத்துரை ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவிக்கு தான் போட்டியிடுவதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “டியர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். எம்.ஐ.டி.யில் நான்கு பட்டங்கள் பெற்றுள்ளேன். வெற்றிகரமாக 7 உயர் மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியுள்ளேன். விண்ணப்பிக்கும் செயல் முறையை அறிவுறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.