யூ- ட்யூபில் இளைஞர் ஒருவர் இரண்டு மணிநேரம் எந்த வேலையும் செய்யாமல் கேமரா முன்பு உட்கார்ந்திருக்கும் வீடியோ 1.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த முகமது திடிட் என்பவர் கடந்த ஜூலை 10 அன்று, 27,000 ஃபாலோவர்களைக் கொண்ட தனது யூ- ட்யூப் பக்கத்தில் வினோதமான வீடியோ ஒன்றைப் பதிவேற்றினார். இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அவர் எந்த வேலையும் செய்யாமல், எதுவும் பேசாமல், இரண்டு மணி நேரமும் கேமராவையும், வீட்டுச் சுவரையும் பார்த்தபடியே அமர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இதுவரை 1.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்கள் தற்போது மீம்களாகவும் மாறி வருகின்றன.
இந்த வீடியோ தொடர்பாக முகமது திடிட் தனது பதிவில், ‘இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். இந்தோனேசிய இளைஞர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையிலான வீடியோவை வெளியிடுமாறு பலரும் என்னிடம் கூறினர். அதனால் கனத்த இதயத்துடன் இந்த வீடியோ எடுத்தேன். இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்டால் அது பார்வையாளர்களான உங்களைப் பொறுத்தது" எனத் தெரிவித்துள்ளார்.