இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருதரப்பும் மோதி வரும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போரில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேலில் 260 பேர் கலந்து கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியில், 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் 1.2 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் ஆதரவு தெரிவித்துள்ளார். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும். எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும். தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் எந்த விதமான விளக்கங்களும் இன்றி அதை எதிர்க்கும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் ஒருமுறை தொலைபேசி உரையாடலுக்கு பின்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடன் இந்த கருத்து பரிமாறல் தொடர்பாக, தன்னுடைய டிவிட்டர் வலைத்தளத்திலும் மோடி பதிவிட்டுள்ளார்.
I thank Prime Minister @netanyahu for his phone call and providing an update on the ongoing situation. People of India stand firmly with Israel in this difficult hour. India strongly and unequivocally condemns terrorism in all its forms and manifestations.
— Narendra Modi (@narendramodi) October 10, 2023