இந்தியா பல நாடுகளுடன் இணைந்து பல்வேறு கூட்டமைப்புகளில் அங்கம் வகித்து வருகிறது. அந்தந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட மேம்பாட்டுக்கு இந்த கூட்டமைப்புகள் உதவி செய்கின்றன. இது போன்றதொரு கூட்டமைப்பு தான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. தெற்காசிய நாடுகளுக்கான வளர்ச்சிகளை மேம்படுத்தவே பிரிக்ஸ் ஏற்படுத்தப்பட்டு தற்போது ஜோகன்னஸ்பர்க் நகரில் 15வது பிரிக்ஸ் மாநாடு நடந்து வருகிறது.
தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கிய ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்க ருஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாகப் பங்கேற்றார். மூன்று நாள் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் கூட்டத்தின் முதல் நாள், பொருளாதாரம், முதலீடுகள், இணைப்பு நாடுகளிடையே நல்லுறவை வலுப்படுத்த விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இரண்டாம் நாளான நேற்று சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தன.
இரண்டாவது நாளான நேற்று, பிரதமர் மோடி தனது உரையில், “இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். வரும் ஆண்டுகளில் உலகின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா இருக்கும்” என பிரிக்ஸ் வர்த்தக மன்றத் தலைவர்களுடனான உரையாடலில் பேசினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், பிரிக்ஸ் நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும். தெற்கிலுள்ள நாடுகளையும் இணைக்க முன்னெடுப்புகள் தேவை எனவும் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, “ஐந்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு புதிய உறுப்பினர்களுக்காக விரிவுபடுத்தத் தயாராக உள்ளது. மேலும், இது உலக நாடுகளிடம் சீரமைப்பதில் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ளது” என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பிரிக்ஸ் விரிவாக்கத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது மற்றும் ஒருமித்த அடிப்படையில் இதை முன்னோக்கி நகர்த்துவதை இந்தியா வரவேற்கிறது. பிரிக்ஸ் கடந்த இரண்டு தசாப்தங்களில் அற்புதமான பயணத்தை மேற்கொண்டுள்ளது” என்றார்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடியும், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவும், தனியே சந்தித்து உரையாடினர். அப்போது, உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலை வலுப்படுத்த இணைந்து செயல்படப் போவதாக இருவரும் பேசியுள்ளார்கள் எனச் சொல்லப்படுகிறது. இது பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “ஜனாதிபதி சிரில் ராமஃபோசா உடன் சிறப்பு சந்திப்பை நிகழ்த்தினோம். இந்தியா-தென் ஆப்பிரிக்கா உறவுகளை ஆழப்படுத்துவதை நோக்கமாக வைத்து பல விதமான பிரச்சனைகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் முதலீட்டு இணைப்புகள் எங்கள் விவாதங்களில் முக்கியமாக இடம்பெற்றது. உலகளாவிய குரலைத் தெற்கிலும் கூட வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும் நேற்றைய பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தயாராகினர். புகைப்பட மேடை அமைக்கப்பட்டு மேடையில் 5 நாடுகளின் தலைவர்கள் வரிசையாக நிற்கும் விதம் தங்களின் நாட்டின் தேசியக் கொடிகளை சிறிய தாளில் அச்சிட்டு தரையில் வைத்திருந்தனர். அப்போது மேடை ஏறிய பிரதமர் மோடி, தரையில் இருந்த இந்தியா தேசியக் கொடியை தனது கையில் எடுத்து வைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க ஜனாதிபதியும் தனது நாட்டுக் கொடியைக் கையில் எடுத்துக் கொண்டார். இந்த காணொளியும் நேற்று வைரலானது.