இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதரான முகமது நபிகளின் பிறந்தநாளை ‘மிலாடி நபி’ என்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வெளியிட்ட பதிவு சர்ச்சனையானதால் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இஸ்லாமிய உம்மத் என்ற அடையாளங்களை பகிர்ந்துள்ள நம்மை எப்போதும் அலட்சியப்படுத்த இஸ்லாமிய எதிரிகள் முயற்சிக்கின்றனர். மியான்மரிலோ, காசாவிலோ, இந்தியாவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ ஒரு முஸ்லீம் படும் துன்பங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால், நம்மை முஸ்லிம்களாகக் கருத முடியாது. ” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் துன்பப்படுவதாக ஈரான் உச்ச தலைவரின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உச்ச தலைவர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம். இது போன்ற தவறான தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாதது. சிறுபான்மையினரைப் பற்றி கருத்து தெரிவிக்கும் நாடுகள், முதலில் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிலையை பார்த்துவிட்ட பின்பு கருத்து தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.