பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கானே காரணம் எனக் கூறி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரீஃப் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, அதன் முக்கிய கூட்டணி கட்சியான எம்கியூஎம் கட்சி திடீரென வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது.
மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் எம்கியூஎம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்தது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைவது ஏறக்குறைய உறுதிச் செய்யப்பட்டுவிட்டது.
முன்னதாக பாகிஸ்தான் மக்களின் கேள்விக்கு பதில் அளித்த இம்ரான் கான், "பாகிஸ்தானில் நிலவும் தற்போதைய நெருக்கடிகள் அனைத்திற்கும், அமெரிக்காவே காரணம். என் அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். பாகிஸ்தான் அடிமையாக இருக்கப் போகிறதா?, சுதந்திரமாக இருக்கப் போகிறதா? என்பதை வாக்கெடுப்பே முடிவு செய்யும். சுதந்திரமான, வெளிப்படையான வெளியுறவுக் கொள்கைகள் பாகிஸ்தானுக்கு அவசியம். கடைசி பந்து வரை நின்று விளையாடுவேன். ஒரு கேப்டனாக என்னிடம் பல திட்டங்கள் உள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.
இன்று காலை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.