Skip to main content

இலங்கையில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்... அவசரநிலையை அறிவித்த அதிபர் கோத்தபய ராஜபக்ஷே!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

Intensifying struggle against the government in Sri Lanka ... President Gotabhaya Rajapaksa declares a state of emergency!

 

இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே. 

 

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால்,  மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் பொங்கி எழுந்த மக்கள், ராஜபக்ஷே சகோதரர்கள் அரசியலில் இருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகனம் எரிப்பு போன்ற உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கோத்தபய அரசுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். 

 

இந்த நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டும் வரும் பொருட்டு, இலங்கையில் அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே பிரகடனப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவசர நிலையை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக, அதிபர் தெரிவித்துள்ளார். அதிபரின் அறிவிப்புகள் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அவசர நிலை அறிவிக்கப்பட்டதன் மூலம், நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவசரநிலைக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 21- ஆம் தேதி கொழும்பில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் நாளன்று குண்டு வெடித்ததில் 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, நாடெங்கும் அசாதாரண சூழல் எழுந்த நிலையில், அப்போதைய அதிபர் மைதிரிபால சிறிசேன அவசரநிலையை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்