பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்தது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, அதன் முக்கிய கூட்டணி கட்சியான எம்.கியூ.எம். கட்சி திடீரென வாபஸ் பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
இம்ரான்கான் அரசுக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதுடன் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனும் எம்.கியூ.எம். கட்சி உடன்படிக்கையையும் செய்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, நாளை (31/03/2022) நடைபெற உள்ளது.
மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் எம்.கியூ.எம். கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைவது ஏறக்குறைய உறுதிச் செய்யப்பட்டுவிட்டது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வரும் நிலையில், இதற்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சியே காரணம் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் அரசைக் கவிழ்க்கும் முயற்சியிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.