ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியாவில் முதல் கோனா எஸ்யூவி எலெக்ட்ரிக் காரை கடந்த ஜூலை 09 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ தூரம் வரை பயணம் செய்யும். இந்த காரின் அழகான வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த காரின் ஆரம்ப விலை ரூபாய் 25.30 லட்சம் ஆகும். சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையில் கோனா எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா நாட்டில் ஏற்கனவே இந்த வகை எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கனடாவில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் கராஜில் ஒரு கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கோனா எலெக்ட்ரிக் திடீரென வெடித்து தீப்பிடித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த காரின் உரிமையாளர் கோனா எலெக்ட்ரிக் காரை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார். சார்ஜிங் பிரச்னையால் கூட இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், கோனாவின் பேட்டரியில் வெப்ப அழுத்தம் அதிகரித்தும் கார் வெடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கனடாவில் விற்பனையாகும் ஹூண்டாய் கோனாவில் 64.0kWh லித்தியம்-ஐயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதனால் கனடாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து கோனா எலெக்ட்ரிக் காரை திரும்ப பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.