ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஆதரவுப்பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.
இதற்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஜப்பான், கனடா ஆகிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த நடவடிக்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மிகவும் புத்திசாலித்தனமான, அற்புதமான நடவடிக்கை எனத் புகழ்ந்துள்ளார். மேலும் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு அமைதி காவலர்களாக ரஷ்யப் படைகளை அனுப்பும் புதினின் நடவடிக்கையும் பாராட்டிய ட்ரம்ப், புதின் செய்வதுபோல் அமெரிக்காவும் தங்கள் தெற்கு எல்லையில் படைகளைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க அமெரிக்காவின் தெற்கில், மெக்சிகோ எல்லையில் ட்ரம்ப் நிர்வாகம் பெருஞ்சுவரை எழுப்ப முயன்றது குறிப்பிடத்தக்கது.