கரீபியன் நாடுகளில் ஒன்றான கயானாவில் உள்ள மஹிடா என்ற இடத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தங்கும் வசதியுடன் கூடிய இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பள்ளியின் தங்கும் விடுதியில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஒரு பக்கத்தில் தீ வேகமாகப் பரவியுள்ளது. இதனைக் கண்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேற அலறியடித்து ஓடியுள்ளனர். அதற்குள் மாணவர்கள் இருந்த அந்த அறையில் தீ பரவியுள்ளது. கடும் தீயில் சிக்கிய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.
மாணவர்கள் விடுதியில் தீப்பற்றிய சம்பவம் குறித்து அந்தப் பகுதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் விடுதியில் சிக்கிய மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தீவிர சிகிச்சையில் இருந்த 6 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரின் செல்போனை ஆசிரியர் ஒருவர் பிடுங்கி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி நள்ளிரவில் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் தூங்கிக்கொண்டு இருந்த போது தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் இந்தச் செயலானது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.