பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை வகித்தவர் நிக்கோலஸ் சார்கோசி. மீண்டும் இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்தநிலையில் 2012 ஆம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சார்கோசி, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகச் செலவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடத் தேர்தலில் அதிகம் செலவு செய்ததற்காக நிக்கோலஸ் சார்கோசிக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக நிக்கோலஸ் சார்கோசியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில், நீதித்துறை விசாரணை தொடர்பாக இரகசிய தகவலைப் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நிக்கோலஸ் சார்கோசி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.