பொது இடத்தில் ஓரினச்சேர்கையில் ஈடுபட்ட இரண்டு பெண்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் பிரம்படி தண்டனை கொடுத்து அதை நிறைவேற்றியும் இருக்கிறது மலேசிய அரசு.
மலேசியாவில் டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் இரண்டு இளம்பெண்கள் ஓரினச்சேர்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக மலேசியா போலீசார் 23 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க அந்த இருவரையும் கைது செய்து ஷரியா ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இஸ்லாம் நாடான மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்பட்டுவருகிற நிலையில் பொது இடத்தில் இவ்வாறு நடந்துகொண்டதற்கு இரண்டு பேருக்கும் தலா 6 பிரம்படிகள் கொடுக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலேயே சுமார் 100 பேருக்கு முன் அவர்கள் இருவருக்கும் பிரம்படி தண்டனை நிறைவேற்றபட்டது. மலேசியாவில் ஓரினச்சேர்க்கை குற்றத்திற்காக பெண்களுக்கு பிரம்படி தண்டனை இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தண்டனைக்கு பல சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் டிரெங்கானு மாநில செயல் கவுன்சில் உறுப்பினர் சாதிபுல் பக்ரி மமத் ''இது அவர்களை துன்புறுத்த கொடுத்ததல்ல இனி இதுபோன்ற குற்றம் நடக்கக்கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த தண்டனை'' என கூறியுள்ளார்.