அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளமான பென்டகன் அருகே வெடி விபத்து ஏற்பட்டதாக வெளியாகியுள்ள புகைப்படம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த, முக்கிய ராணுவ தளமான பென்டகன் விர்ஜீனியாவில் போட்டோமோக் நதிக்கரையில் அமைந்துள்ளது. பென்டகன் என்றால் ஐங்கோணம் என்று அர்த்தம். அதன்படி, இந்த ராணுவ தலைமையக கட்டடம் ஐங்கோண வடிவில் கட்டப்பட்டு இருக்கிறது. 65 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட பென்டகன்தான் உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடம் ஆகும். அதுமட்டுமில்லாமல் பென்டகனில் எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்காவையும் தாண்டி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இரும்பு கோட்டையாக உலக நாடுகளால் பார்க்கப்படும் பென்டகன் அருகே வெடிவிபத்து ஏற்பட்டதாகப் புகைப்படத்துடன் பரவிய செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே அமெரிக்க பங்குச் சந்தையின் 30 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்த நிலையில் பென்டகன் அருகே வெடிவிபத்து என்று பரப்பப்பட்ட செய்தியும், புகைப்படமும் போலியானது என பென்டகனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவை(AI) பயன்படுத்தி உருவாக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்க காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.