தொழில்நுட்ப பிரச்சனைகளால் நேற்று (04.10.2021) இரவு முதல் இயங்காமல் இருந்த ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
இன்றைய இளைய தலைமுறையினரின் மிக முக்கிய பொழுதுபோக்காக இருப்பது சமூக வலைதளங்கள். அதில், மிக முக்கிய இடத்தை வகிப்பது ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள். இவை தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முடங்கிப் போனது. இதனால் அதைப் பயன்படுத்தும் பயனாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மற்ற சமூக வலைதளங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, இன்று அதிகாலை தொழில்நுட்ப பிரச்சனை அனைத்தும் சரிசெய்யப்பட்டு இந்த மூன்று வலைதளங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சமூக வலைத்தள முடக்கத்திற்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.