இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் இந்தத் தொடர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், பொதுமக்கள் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா, அரசுக்கு கூட்டணி கட்சிகள் அளித்துவந்த ஆதரவு வாபஸ் என இலங்கை அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், அவசர நிலை பிரகடனத்தை திரும்பப்பெறுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த அவசர நிலை பிரகடன வாபஸ் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.