ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் அங்கம் வகிக்கமாட்டார் என்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
உலகில் மிக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தான் ஒரு சமூக ஊடகத் தளத்தை நிறுவ இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை அண்மையில் வாங்கினார். இதையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் அங்கம் வகிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்ப்பாராத திடீர் திருப்பமாக, ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் அவர் இடம் பெற போவதில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பலமுறை எலான் மஸ்கிடம் ஆலோசித்ததாகவும், ஆனால், அவர் ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணையப்போவதில்லை என்று கூறிவிட்டதாகவும் பராக் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.