உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக்கொண்டார். ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்தார். ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார்.
இதன் பின் ட்விட்டர் புளூ டிக் விவகாரம், போலிக் கணக்குகள் போன்ற விவகாரங்கள் பெரிதும் பேசுபொருளாயின. இதனிடையே பிரபல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களின் கணக்குகளை முடக்கினார். இதுவும் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் டிச. 19 ஆம் தேதி, “நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? வாக்கெடுப்பின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்” எனக் கூறி ‘போல்’ எனச் சொல்லப்படும் வாக்கெடுப்பிற்கான சுட்டியையும் இணைத்திருந்தார். மக்கள் அதில் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 57%-க்கும் அதிகமானோர் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என வாக்களித்தனர்.
இதன் பின் இன்று காலை வாக்கெடுப்பிற்குப் பதிலளித்த எலான் மஸ்க் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ட்விட்டர் சிஇஓ பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவேன். அதன் பின் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டுமே தலைமை வகிப்பேன்” எனக் கூறியுள்ளார்.