உலகில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவரும் ட்விட்டர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மாஸ்க் ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
ட்விட்டர் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், "ட்விட்டரை வாங்கிய பிறகு நான் சில நேரங்களில் சான் பிரான்சிஸ்கோ ட்விட்டர் அலுவலகத்திலேயே உறங்கி உள்ளேன். ட்விட்டரை வாங்கியபோது ஆரம்பத்தில் குறைந்த விளம்பர வருவாய் தான் கிடைத்தது. ஆனால், தற்போது திரும்பவும் பழையபடியே அதிக வருவாய் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலை தொடர்ந்தால் நடப்பு காலாண்டில் ட்விட்டரில் வருமானம் நன்றாக இருக்கும்.
ஊழியர்களை பணிநீக்கம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. செலவை குறைக்கவில்லை என்றால் மொத்த நிறுவனமும் திவாலாகி விடும். மொத்த நிறுவனமும் மூழ்கிவிட்டால் யாருக்கும் வேலை கிடைக்காது. ட்விட்டர் நிறுவனத்தை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்த ஒன்று ஆகும். மேலு,ம் சமூக வலைதளங்கள் தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் மிகவும் கடுமையாக உள்ளன. நாட்டின் சட்டங்களைத் தாண்டி நம்மால் செல்ல முடியாது. சட்டங்களை மதிக்க வேண்டும் அல்லது எங்கள் ஊழியர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் நாங்கள் சட்டங்களை மதிப்பதை தான் தேர்வு செய்வோம்" என்றார்.