சமீப காலமாக இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் இறங்கியுள்ளனர். இதனால் உலகளவில் பல நாடுகளும் பாதிப்படைகின்றன. கடந்த மாதம் கூட அமெரிக்கா சீனாவின் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இந்நிலையில்,சுமார் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த கூடுதல் வரிப் பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், சீன கடல் உணவுகள், கார்பெண்டரி பொருட்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ், “சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெளிவு படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.மேலும் அதில்,அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.