சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் கடந்த 9 நாட்களாக, மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 25 ஆயிரம் போன்று தங்களுக்கும் வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இவர்களுக்கு உரிய ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் 10-வது நாளான சனிக்கிழமையன்று சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதில் வரும் 21- நாட்களுக்குள் பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என எழுத்து மூலமாக சுகாதாரத்துறை செயலாளர் உறுதி அளித்துள்ளார். இதனை ஏற்று 10 நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் சனிக்கிழமை மாலை போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். மேலும் அனைத்து பயிற்சி மருத்துவர்களும் பணிக்கு செல்வதாக கூறி உள்ளனர்.