துருக்கியில் நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சாப்பாடு, குடிநீர் இன்றி இடிபாடுகளில் சிக்கியிருக்கும் தங்களது உறவுகளை கண்ணீருடன் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கமும் அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.