ஜார்ஜ் ஃபிளாய்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெரெக் சவ்வின் 1.25 மில்லியன் டாலர் பணம் செலுத்தினால் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்படும் என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் இறப்புக்குக் காரணமான காவலர் உட்பட நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, முக்கிய குற்றவாளியான டெரெக் சவ்வின் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது.
ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிறையில் இருக்கும் 44 வயதான டெரெக் சவ்வின் காணொளிக்காட்சி மூலம் ஹென்னெபின் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். அப்போது ஜாமீன் தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், எந்தவொரு நிபந்தனையுமின்றி விடுவிக்க விரும்பினால் 1.25 மில்லியன் டாலர் ஜாமீன் தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வருங்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுதல், துப்பாக்கிகளை வைத்திருக்காமல் இருப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற விரும்பினால் 1 மில்லியன் டாலர் செலுத்தி ஜாமீன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.