கரோனா வைரஸ் தோற்று உலக மக்களை அச்சுறுத்தி வரும் சூழலில் இதுவரை இந்த வைரஸ் காரணமாக 259 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 19 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 9000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், கரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் தோற்றால் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் மட்டும் சுமார் 1.02 லட்சம் பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் சிகிச்சையளித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் கிடைத்த இடங்களில், கிடைக்கும் சிறிது நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.