அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ள நிலையில், பல ஆண்டுகளாக அமெரிக்காவை இந்தியா மிக மோசமாக நடத்தி வருகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.
இந்நிலையில் தனது இந்திய பயணம் குறித்து பேசிய ட்ரம்ப், "அடுத்தவாரம் இந்தியாவுக்கு செல்கிறேன். பல ஆண்டுகளாகவே அமெரிக்காவை இந்தியா மிக மோசமாக நடத்தி வருகிறது. உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா தான். இந்தியாவுடன் தொழில் செய்வது அமெரிக்காவுக்கு மிகவும் கடினம்.
பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் செய்வதற்கு விருப்பமில்லை" என தெரியவில்லை.