கரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை பார்த்தால் போதுமானது என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா, இத்தாலி என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் உள்ள தங்களது ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என அறிவித்துள்ளது. சுமார் 5000 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் சூழலில், கரோனா பரவல் காரணமாக, தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் தேவையற்ற வியாபார சந்திப்புகள் மற்றும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.