பன்றிக் காய்ச்சல், எய்ட்ஸ் ஆகிய நோய்கள் முதன்முதலில் அமெரிக்காவில்தான் கண்டறியப்பட்டன, அதற்கெல்லாம் நாங்கள் இழப்பீடு கேட்டோமா என சீனா, அமெரிக்காவை கேட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, அதிலிருந்து மீள திணறி வருகிறது. அமெரிக்காவில் ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணமென தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் ட்ரம்ப், கரோனா வைரஸ் பரவலுக்குக் காரணமான சீனாவிடம், உலக நாடுகள் இழப்பீடு கோர வேண்டும் என அண்மையில் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகக் கூறிய ட்ரம்ப், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை வுஹான் வைரஸ் சோதனைக்கூடம் மறுத்திருந்த நிலையில், பன்றிக் காய்ச்சல், எய்ட்ஸ் ஆகிய நோய்கள் முதன்முதலில் அமெரிக்காவில்தான் கண்டறியப்பட்டன, அதற்கெல்லாம் நாங்கள் இழப்பீடு கேட்டோமா என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கேள்வியெழுப்பி உள்ளது.
அமெரிக்காவை மேலும் கடுமையாக விமர்சித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் ஷுவாங், "பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில்தான் கண்டயறிப்பட்டது. 214 நாடுகளுக்கு பரவிய அந்த நோய் சுமார் 2 லட்சம் மக்களைக் கொன்றது. இதற்காக அமெரிக்காவிடம் யாராவது இழப்பீடு கேட்டோமா ? 1980-களில் எய்ட்ஸ் நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது அமெரிக்காவில்தான். இந்த நோய் உலகிற்கு பெரும் துயரமாக மாறியது. இதற்கு யாராவது அமெரிக்காவை பொறுப்பேற்க கூறினோமா ?
2008ஆம் ஆண்டு லேஹ்மன் சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தால் உலக பொருளாதாரமே பாதிப்படைந்ததாக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி கூறினார். அதற்கு அமெரிக்காவிடம் யாரவது இழப்பீடு கேட்டோமா?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.