தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தென் மாவட்டங்களில் நடைபெறும். மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை என்றாலும், ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடங்கும். அங்குள்ள தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இலங்கையிலும் நடைபெற்று வருகிறது. இலங்கையின் திரிகோணமலை சம்பூரில் இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி முதல்முறையாக இலங்கையில் நடைபெறுவது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையடுத்து, தமிழக மக்களின் அனைத்து பாரம்பரிய போட்டிகளையும், பொங்கல் திருநாளையொட்டி, இங்கு நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்; ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், சிலம்பம் போட்டி, ரேக்லா பந்தயம், கடற்கரை கபடி, படகுப் போட்டி எனத் தமிழர்களின் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.