நெட்பிளிக்ஸ் இணையத்தில் பிரேக்கிங் பேட் என்றொரு வெப் சீரிஸ் உள்ளது. அந்த சீரிஸின் கதை கல்லூரி பேராசிரியர் ஒருவர், போதைப்பொருளை தயாரித்து. எப்படி அதை விற்று பணம் சம்பாதிக்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதுதான். இதேபோல சம்பவம் அமெரிக்காவில் இரு பேராசிரியர்கள் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஆர்கன்சாஸ் மாகாணத்தில் அர்காடெல்பியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் டெர்ரி டேவிட் பேட்மேன், பிராட்லி ஆலன் ரோலண்ட்.
இவர்கள் இருவரும் சேர்ந்து யுனிவெர்சிட்டி லேபில் ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதைப்பொருளை தயாரித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மையத்தில் ரசாயன நெடி ஏற்பட்டதை தொடர்ந்து, நடத்திய விசாரணையில் பேராசிரியர்கள் இருவரும் போதைப்பொருள் தயாரித்ததை கண்டுபிடித்துள்ளது நிர்வாகம்.
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் இருவருக்கும் கட்டாய விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகம். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பேராசிரியர்கள் இருவரும் யுனிவெர்சிட்டி லேபில் போதைப்பொருள் தயரித்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமானால் இருவருக்கும் தலா 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.