உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. மாணவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மக்கள் குடும்பம் குடும்பமாக மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு 23 வயது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்ட நிலையில் காவல் துறையினர் சென்று பார்த்தபொழுது கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. உடனடியாக தாயையும், சேயையும் மீட்ட காவல்துறையினர் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போர்க்களத்தின் நடுவில் ஒரு குழந்தையின் ஜனனம் அங்கிருப்போரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய தோடு நெகிழவும் செய்தது.