பெனாஷீர் பூட்டோவைக் கொன்றதே அவரது கணவர்தான்! - பர்வேஸ் முஷரப்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நீதிமன்றம், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஷீர் பூட்டோவின் மரணத்தில் முன்னாள் அதிபர் முஷரப்பிற்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தது.
இதுகுறித்து, தனது கட்சியின் இணையதளப் பக்கத்தில் வீடியோ மூலம் தோன்றிய முஷரப், ‘முன்னாள் பிரதமர் பெனாஷீர் பூட்டோ மற்றும் அவரது தம்பியைக் கொன்றவர் பூட்டோவின் கணவர் அசிப் அலி சர்தாரிதான். இந்தக் கொலையின்மூலம் ஆதாயம் கண்டது சர்தாரி மட்டும்தான். இந்த வழக்கால் நான் பெற்றதைவிடவும் இழந்ததுதான் அதிகம். என் அதிகாரமும் அப்போதைய அரசியல் சூழலும் மாறிப்போனது. இந்தக்கொலை குறித்து அப்போது அதிகாரத்தில் இருந்த சர்தாரி முறையாக நடவடிக்கை எடுக்காததற்கு காரணமே அந்தக் கொலையில் அவருக்கு தொடர்பிருப்பதனால்தான்.
குண்டு துளைக்காத காரில் திறப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததுதான் எனக்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியது. முதலில் மக்களைச் சந்தித்துவிட்டு காருக்குள் அமர்ந்த பூட்டோ, தொடர் அலைபேசி அழைப்பை அடுத்துதான் மீண்டும் காருக்கு வெளியே எட்டிப்பார்த்தார். அப்போதுதான் அவர் சுடப்பட்டார். அவர் சுடப்பட்டதில் இருந்து அந்த அலைபேசி தொலைந்துபோனது எப்படி? மிகமுக்கியமாக சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது சஹேன்ஷா எனும் நபரைக் கொன்றவர்தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதுதான். அவரும் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கெல்லாம் பதில் சர்தாரியிடம் தான் இருக்கிறது’ இவ்வாறு பேசியுள்ளார்.
கடந்த டிசம்பர் 27, 2007 அன்று ராவில்பிண்டியில் நடந்த பிரச்சாரத்தின்போது பெனாஷிர் பூட்டோ தலையில் சுடப்பட்டும், குண்டுவெடிப்புத் தாக்குதலிலும் சிக்கி படுகொலை செய்யப்பட்டார். அவரது தம்பி முர்தாசா பூட்டோ கடந்த 1996ஆம் ஆண்டு கராச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மரணத்தின் போது சர்தாரிமீது குற்றம்சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்