பிறந்து 6 நாட்கள் ஆன குழந்தையை தனது கைப்பைக்குள் வைத்து விமானத்தில் எடுத்து செல்ல முயன்ற பெண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் எரின் டால்போட் என்ற பெண் கடந்த புதன்கிழமை பிலிப்பைன்சின் மணிலா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை போர்டிங் கேட்டில் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது கைப்பையில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.
குழந்தைக்கு பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் அல்லது அரசாங்க அனுமதி என எதுவும் இல்லாத நிலையில், அந்த குழந்தையுடன் அமெரிக்கா செல்வதற்காக திட்டமிட்ட அவர் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை கண்டுபிடித்த பிறகு, விமான ஊழியர்கள் குடியுரிமை பணியாளர்களை வரவழைத்தனர், அவர்கள் விமான நிலையத்தில் டால்போட்டை கைது செய்தனர். பின்னர் அவர் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். குழந்தை அரசாங்க நலப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.