ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு சீனா, மியான்மர், வட கொரியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் காரணமாக இந்த பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனமான சென்ஸ்டைம் குரூப்பை முதலீடு தடுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.
அமெரிக்காவோடு இணைந்து கனடாவும், பிரிட்டனும் மியான்மரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்த புதிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா, "எங்களது இன்றைய நடவடிக்கைகள், குறிப்பாக பிரிட்டன் மற்றும் கனடாவுடன் கூட்டு சேர்ந்து எடுத்த நடவடிக்கைகள், துன்பத்தையும் அடக்குமுறைகளையும் ஏற்படுத்த அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகள் செயல்படும் என்ற செய்தியை அளிக்கும்" எனக் கூறியுள்ளது.
அதேநேரத்தில் சீனா அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை கடுமையாக மீறுவதாகவும், சீனா-அமெரிக்கா இடையிலான உறவை கடுமையாகப் பாதிக்கும் எனவும் கூறியுள்ளது.