இலங்கையின் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மஹிந்த ராஜபக்சேவுக்கு ஆறு வயது சிறுவன் ஒருவன் எழுதியுள்ள கடிதத்தை, ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த அப்துல்லா என்ற அந்த ஐந்து வயது சிறுவன், தனது கடிதத்தில், ராஜபக்சேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, "தயவுசெய்து உங்களால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? நம் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இலங்கையில் எழில்மிகு கடல் மற்றும் கடற்கரைகளை பாதுகாக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அப்போது தான் அங்கு ஆண்டுக்கொரு முறை வருகை புரியும் ஆமைகளும் பாதுகாப்பாக இருக்கும், என்னை போல.." என எழுதியுள்ளான்.
சிறுவனின் அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மஹிந்த ராஜபக்சே, "இன்று காலையில் எனக்கு 6 வயது சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் கிடைத்தது. இக்கடிதம் எனக்கு வெகுவாக உத்வேகம் தந்ததுடன் ஊக்கமளித்தது. இளம் தலைமுறையினர் மீதான பொறுப்புகளை நினைவுபடுத்தும் விதமாகவும் இது இருந்தது. ஒரு நாள் நிச்சயம் அச்சிறுவனை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேம். உனக்கு எனது வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டிருந்தார்.