அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம், அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார். சென்னை ஆர்.டி.எம்.புரத்தில் கடந்த 14ஆம் தேதி நடந்த நிகழ்வில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சி முடித்த 24 பேர் உட்பட 58 பேருக்கு, பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
''முறையாகப் பயிற்சிபெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 58 அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சிலர் அவதூறாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். சில ஊடகங்களும், சில முகநூல் நண்பர்களும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசுபோல் சித்தரிக்க நினைக்கிறார்கள். இந்துக்கள், இந்துத்துவா என்பதைக் கையில் எடுப்பவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது என்ற காரணத்திற்காக இப்போது அர்ச்சகர் நியமனப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். யாரையும் கோவிலில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த நியமனமும் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்த இந்துசமய அறநிலையத்துறைக்கு முதல்வர் கொடுக்கும் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வலுசேர்க்க வேண்டும்'' என்று கடந்த 17ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். இந்தத் திட்டதிற்கு அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பும் ஆதரவும் குவிந்துவருகின்றன.
அதேநாள் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலினும், ''தமிழகக் கோவில்களில் ஏற்கனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்'' என விளக்கமளித்துப் பேசினார்.
இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயில் நடைமுறைகளை மாற்றியமைக்கக் கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியுள்ள ஜீயர், இந்தத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.