கடந்த 2011ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகிய மூவரும் ஈமு கோழி வளர்ப்பு முதலீட்டுத் திட்டம் எனக் கூறி 121 முதலீட்டாளர்களிடம் தலா ரூபாய் 1.5 லட்சம் என மொத்தம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து முதலீட்டாளர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஈமு கோழி முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கி மோசடி செய்த மூன்று பேர் மீதும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றம் என்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இதையடுத்து, வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி இன்று (05/08/2021) தீர்ப்பளித்தார். அதன்படி, யுவராஜ் உள்ளிட்ட மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 2.47 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதில் யுவராஜ் என்பவர், மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.