'பிராங்க்' என்ற பெயரில் பொதுவெளியில் பெண்கள் மற்றும் முதியவர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி வரும் நிலையில் அது குறித்த புகார்களும் மறுபுறம் அதிகரித்து வருகிறது. அண்மையில் கோவையில் இதுபோன்று பொது இடங்களில் 'பிராங்க்' செய்து வீடியோ வெளியிட்ட 'கோவை 360' என்ற யூடியூப் சேனல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்களை வெளியிடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையிலும் இதேபோல் பல இடங்களில் பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்பட்டு யூடியூப்களில் போடப்பட்டு வருவதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் கட்டெறும்பு உள்ளிட்ட ஐந்து யூடியூப் சேனல்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுத்துள்ள பிராங்க் வீடியோக்களுடன் இந்த புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரோஹித் குமார் என்பவர் கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல் மற்றும் நாகை 360 உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். குறிப்பிட்ட இந்த யூடியூப் சேனல்களில் முதியவர்கள், பெண்கள் அனுமதி இல்லாமல் துன்புறுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் வீடியோக்களை ஆய்வு செய்து வரும் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.