தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இந்தி திணிப்பு போராட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாட்டு மக்களின் செயல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும்தான் இந்தி மொழி என்றாலே தீப்பொறி பறக்கிறது. என்ன காரணம் என்றால் இதற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாகக் கடந்த 1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகு ராஜாஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்படும் என அறிவித்தார்.
அதற்குத் தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாத ராஜாஜி அரசு 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டது. இதனால் வெகுண்டெழுந்த தனித் தமிழ் இயக்கங்களும், மாணவர்களும், தமிழறிஞர்களும் வீதிக்கு வீதி போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தின் போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அன்றைய ராஜாஜி அரசு திணறிப் போனது. ஒரு கட்டத்தில், 1940 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக ராஜாஜி அரசு அறிவித்திருந்தது.
தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிரான மனநிலை பல மாநிலங்களில் நிலவி வந்தது. ஆனால், இத்தகைய போராட்டங்கள் அன்றோடு முடியவில்லை. தற்போது வரை தொடர்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிப்பதற்கான வேலைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த மூத்த திமுக தொண்டர் தங்கவேல் கடந்த 26 ஆம் தேதி தீக்குளித்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் தமிழ் மொழியை மறைத்து அதன் மேல் இந்தி எழுத்தால் 'சகயோக்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழி என்ற அறிவிப்பு பலகை இந்தியில் திவ்யாங்ஜன் என எழுதப்பட்டிருந்தது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அந்த ஸ்டிக்கர்களை அதிகாரிகள் அகற்றினர்.
தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தமிழர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது.