
கோவை, போத்தனூர் இட்டேரி ஓடை பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நேற்று மாலை போதை ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். போதையில் இருந்த அந்த இளைஞர்கள் இருவரும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து போதை ஊசி போட்டுக்கொள்ளத் தூண்டியுள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் போத்தனூர் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் கிடைத்த போத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி, தனது உதவியாளருடன் அங்கு சென்ற போது கார், போதை ஊசிகள் மற்றும் போதை ஊசி மருத்து தயாரிக்க பயன்படுத்தும் மாத்திரைகளையும் போட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி விசாரித்த போது, அவர்கள் போத்தனூர் சாய்நகர் பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான், அபுபக்கர் சித்திக் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த கார் மற்றும் போதை ஊசிகளையும், மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், போத்தனூர் பகுதியில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் இம்ரான்கான், அபுபக்கர் சித்திக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது போதைப் பொருள் ஒழிப்பு சட்டம், மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.