பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலைய போலீசார் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அரியலூர்-பெரம்பலூர் சாலையில் மேலமாத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திக் கொண்டு அரியலூர் வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்திக்கொண்டு வந்த மெய்யப்பன் சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த டாட்டா இன்டிகா காரை பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சுதாகர், மெய்யப்பன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மதுபாட்டில் கடத்தப் பயன்படுத்தப்பட்ட அந்த காரை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மதுவிலக்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் காரை அதன் உரிமையாளர் மெய்யப்பன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மெய்யப்பனின் செல்போன் நம்பரின் சிக்னல் செயல்பாடுகளை வைத்து பலாக்குறிச்சி பகுதியில் இருந்த அவரையும் அவருடன் காரையும் சேர்த்து போலீசார் கைது செய்தனர். கார் திருடுவதற்கு உடந்தையாக இருந்த மற்ற மூன்று பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.