முதல்வர் பாதுகாப்பு வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சென்றது திருட்டு வாகனம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று தமிழக முதல்வர் தனது பாதுகாப்பு கான்வாய் வாகனத்தில் தமிழக தலைமைச் செயலகத்திலிருந்து அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் நேப்பியர் பாலத்தை கார் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர் முதல்வரின் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற நிலையில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அந்த இளைஞரை வாகனத்துடன் மடக்கி பிடித்துள்ளனர். பைக்கில் நெம்பர் பிளேட் இல்லாததால் அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நபரின் பெயர் அஜித் என்பதும், சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அஜித் திருடிக் கொண்டுவந்த வாகனத்தில் சுற்றித்திரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வர கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை ஆழ்வார்பேட்டை பகுதியிலும் முதல்வர் வாகனத்தை முந்தி செல்ல முயன்ற நபர் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் முறையாக அதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் முதல்வரின் பாதுகாப்பை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.