திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் இளைஞரின் கையில் இருந்த தீப்பெட்டியை பறித்துச் சென்றனர். தொடர்ந்து அந்த இளைஞர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் எரிச்சல் ஏற்பட்டதாக கத்தினார். உடனே அங்கிருந்த போலீசார் அருகிலிருந்த தண்ணீர் குழாயில் அவரை குளிக்க வைத்தனர். அதன்பிறகு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்த பொழுது, அந்த இளைஞர் ''வீட்டு அருகே கோவில் ஒன்று இருக்கிறது. எப்போதுமே பத்து மணிக்கெல்லாம் சவுண்டை ஆப் செய்து விடுவார்கள். நான் ஒன்பதரை மணிக்கு போய் சவுண்டை ஆப் செய்யுங்கள் என கேட்டேன். நிறுத்தவே இல்லை அதனால் போலீசாருக்கு போன் பண்ணி சொன்னேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டருகே வந்து பயங்கரமாக சண்டை போட்டு எங்களை தாக்கினார்கள். அதற்கு நியாயம் கேட்டு தற்கொலைக்கு முயன்றேன்'' என தெரிவித்தார்.