வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டை சுழன்றடித்து பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கியது. குறிப்பாக, வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியாததால் தற்போதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து குறிப்பிட்ட சாலைகளில் மட்டும் செல்வதால் சென்னையில் பல இடங்களில் வாகன நெரிசலும் காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வரும் அமைச்சர்களும் இரவு பகல் பாராது ஆய்வு செய்துவருகிறார்கள். சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்துவந்த முதல்வர், இன்று (12.11.2021) காஞ்சிபுரம் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக காஞ்சிபுரம் செல்லும் வழியில் டீக்கடையில் வாகனத்தை நிறுத்தி தேநீர் அருந்திய முதல்வரை அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் சூழ்ந்துகொண்டு ஃபோட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.