நார்த் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சோமசுந்தரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் சாலை மறியல் செய்தனர்.
தி.நகரில் உள்ள புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்று சோமசுந்தரம் மைதானம். இங்கு காலையில் வாக்கிங் செல்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் என்று தினமும் 2000 பேர் அதனைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாகக் குப்பைகள் அள்ளும் இயந்திரத்தை மைதானத்தின் உட்புறமாக மாநகராட்சி ஊழியர்கள் நிறுத்திவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
இதனால் அந்த மைதானத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, லாரிகள் தொடர்ந்து சென்று வருவதால் அதனைப் பயன்படுத்துவதற்கும் முடியாமல் போய் உள்ளது. இதனால் இன்று கிரிக்கெட் விளையாட அங்கு வந்த இளைஞர்கள் அதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களைக் கலைத்தனர். காவல்துறை அதிகாரிகள் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரிடம் இதுதொடர்பாக பேசியுள்ளனர். விரைவில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.